இதுபோல தண்டனை கொடுத்தா பைக் ரேஸ் பத்தி இளைஞர்கள் யோசிக்கவே மாட்டாங்க.. சாட்டையை சுழற்றிய நீதிபதி.!
சென்னையில் பைக் ரேஸ் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அபாயகரமாக ஸ்டண்ட் செய்த பைக்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம், இன்ஸ்டாகிராமில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதற்கு எதிராக வீடியோ பதிவிட்டு பிரச்சாரம் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் பைக் ரேஸ் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி அன்று நள்ளிரவில் தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக இருசக்கர வாகனங்களை இயக்கி சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இது குறித்து R-4 பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க;- அதிகரிக்கும் பைக் ரேஸ்.. பெத்தவங்க தான் பொறுப்பு.. கடும் நடவடிக்கை எடுப்போம்.. எச்சரிக்கை விடுத்த காவல்துறை..
இந்நிலையில், 22 வயதான பி.டெக் படிப்பை பாதியில் நிறுத்திய கோட்லா அலெக்ஸ் பினோய் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்ஜாமீன் வழங்கி பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
* சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு வீடியோவை உருவாக்கி, 40,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட தனது இன்ஸ்டாகிராம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* 40,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும்.
* ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் விழிப்புணர்வு வீடியோவை உருவாக்கி அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* தேனாம்பேட்டை-மவுண்ட் ரோடு சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னலில் 3 வாரங்களுக்கு ஆஜராக வேண்டும். காலை 9:30 மணி முதல் 10:30 வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6. 30 வரை சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும்
* துண்டு பிரசுரங்கள் அச்சிடுவதற்கான செலவை மனுதாரரே ஏற்க வேண்டும்.
* சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர் முன் ஆஜராகவும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மூன்று வாரங்களுக்கு வார்டு பாய்களுக்கு உதவ வேண்டும்.
* துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் திங்கட்கிழமைகளில் செய்யப்பட வேண்டியிருப்பதால், வாரத்தின் மற்ற 6 நாட்களிலும் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் ஆஜராக வேண்டும்.
* அவசர சிகிச்சை பிரிவில் தனது அனுபவத்தைப் பற்றி தினமும் ஒரு பக்க அறிக்கையை மருத்துவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு, டீன் அந்த அறிக்கைகளை இந்த நீதிமன்றத்திற்கு அனுப்புவார்.
இதுபோன்று பணியாற்றும் இளைஞர்கள் அன்றாடம் நடக்கும் விபத்துகள்.. அதன்மூலம் பெற்றோர்கள் வடிக்கும் கண்ணீர் போன்றவற்றை பார்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாவார்கள். அது அவர்களுக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி மீண்டும் பைக் ரேஸில் ஈடுபட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.