சென்னை திருமங்கலத்தில் கடன் தொல்லையால் டாக்டரும் அவரது குடும்பத்தினர் என 4 பேர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல என்பதை உணர வேண்டும்.
Chennai doctor and his family members suicide | சென்னை திருமங்கலம் 17ஆவது வீதியை சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன், வயது 52. அவரது மனைவி சுமதி, வயது 47. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வந்தார். இவர்களுக்கு ஜஸ்வந்த் குமார் (19) மற்றும் லிங்கேஷ் குமார் (17) என்ற இரு மகன்கள். லிங்கேஷ் குமார் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்றிரவு திருமங்கலம் வீட்டில் டாக்டர் பாலமுருகன், அவரது மனைவி சுமதி மற்றும் இரு மகன்கள், தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டது இன்று காலையில்தான் தெரிய வந்தது.
மனநலம்: மன அழுத்தத்தை குறைக்கும் 5 ஜப்பானிய வழிகள்
இதையடுத்து தகவலின் பேரில் சென்னை திருமங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து காவல் துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில், டாக்டர் பாலமுருகனின் குடும்பத்திற்கு ரூ.5 கோடி அளவிற்கு கடன் இருந்ததும், இதனால் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், திருமங்கலம் பகுதியில் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணைத்தை தவிர்க்க, கட்டணமில்லாத மன நல ஆலோசனை சேவை அரசால் வழங்கப்படுகிறது. தற்கொலை எண்ணம் மேலோங்கினால் தயங்காமல் 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மகளால் மன அழுத்தம்! தற்கொலை முயற்சியா? என்ன நடந்தது? பாடகி கல்பனா பரபரப்பு விளக்கம்!
