தெரு நாய்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி ரூ.52 கோடி செலவில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

Chennai Corporation's Plan to Control Street Dogs: தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. பெண்கள், குழந்தைகளை துரத்தி துரத்தி கடிக்கும் தெரு நாய்கள் சாலை விபத்துகளுக்கும் முக்கிய காரணமாக விளங்கி வருகின்றன. குறிப்பாக சென்னையில் தெரு நாய்கள் அனைத்து பகுதிகளிலும் அதிகமாக காணப்படுவதால் இரவு வெளியே செல்வதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தெரு நாய்கள் தொல்லை

இதன் தொடர்ச்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிப்பதற்கும், நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை அதிகளவில் மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்க முடிவெடுக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும்.

நாய்களுக்கு 72 காப்பகங்கள்

கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு 72 காப்பகங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும். விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக அறுவை சிகிச்சை மையங்கள் மற்றும் அத்துடன் இணைந்த நாய் காப்பகங்கள் கால்நடை மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படும்.

சென்னை மாநகராட்சியின் ரூ.52 கோடி திட்டம்

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ளூர் கண்காணிப்பு குழு அமைத்து நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சில முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னையில் தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளை கண்காணிக்க மாநகராட்சி ரூ.52 கோடி மதிப்பில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், நாய்கள் மீது மைக்ரோசிப் பொருத்தப்படும். மேலும் இதற்கு என தனி செயலிகள் நாய்கள் கண்காணிக்கப்பட்டு பிடிக்கப்படும்.

தெரு நாய்களை கண்காணிக்க செல்போன் செயலி

மைக்ரோசிப் மூலம், நாய்களின் அடையாளம், உடல் நிலை, தடுப்பூசி விவரங்கள் போன்றவை பதிவு செய்யப்படும். தொடர்ந்து செயலி மூலம், இந்த தகவல்கள் சேமிக்கப்பட்டு எதிர்கால பயன்பாட்டுக்கு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் செல்ல பிராணிகளை பாதுகாக்கவும், அதே வேளையில் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.