Chennai Central: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையம் ஆனது சென்னை சென்ட்ரல்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நாட்டிலேயே முதல் முறையாக குரல் அறிவிப்புகள் இல்லாத அமைதியான ரயில் நிலையமாக மாறியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிற குரல் மூலம் ரயில்வே அறிவிப்புகளைத் தெரிவிக்கும் முறைக்குப் பதிலாக கூடுதலான தகவல் மையங்களும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகளும் செயல்படும் நிலையில் இருப்பதையும், தகவல் மையங்களில் போதுமான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai: தூங்கும் குழந்தையைக் கடந்த முயன்ற நபரை துரத்திப் பிடித்து மொத்திய ஊர்மக்கள்!
ஈவிஆர் பெரியார் சாலை (எம்டிசி பேருந்து நிறுத்தம்), புறநகர் முனையம், வால் டாக்ஸ் சாலை (கேட் எண் 5) ஆகிய மூன்று நுழைவு வாயில்களிலும் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரயில்களின் வருகை மற்றும் கிளம்பும் நேரத்தைக் காட்டும் பெரிய டிஜிட்டல் திரைகள் நிறுவப்பட்டுள்ளன. பயணிகள் வந்துசெல்லும் பகுதகளிலும் ஆங்காங்கே 40 முதல் 60 இன்ச் அளவில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை சென்டரலில் ரயில் அறிவிப்புகள் மட்டுமின்றி ஆடியோ விளம்பரங்களும் இருக்காது என்று சென்னை ரயில்வே கோட்டத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் புறநகர் ரயில்களில் குரல் அறிவிப்பு முறையே தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட 200 எக்ஸ்பிரஸ் ரயில்களை சென்ட்ரல் நிலையம் நிலையம் கையாளுகிறது. இதில் தினசரி இயக்கப்படும் 46 ஜோடி ரயில்களும் அடங்கும். நாள்தோறும் சராசரியாக 5.3 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு தமிழ் அறிவிப்புகளுக்கு குரல் கொடுப்பவர் ஈரோட்டைச் சேர்ந்த டப்பிங் கலைஞரும் கல்லூரி விரிவுரையாளருமான கவிதா முருகேசன்.
ரயில்கள் வருகை, புறப்பாடு, தாமதம், நடைமேடை போன்ற தகவல்களைத் தெரிவிக்க குரல் அறிவிப்பு முறை பயன்படுத்தப்பட்டது. பார்வை குறைபாடு உள்ள பயணிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது. இப்போது அவர்களுக்கு உதவும் வகையில் நிலையம் இப்போது அதன் பிரதான நுழைவாயிலில் பிரெய்லி முறையில் உருவாக்கப்பட்ட வழிகாட்டும் வரைபடங்கள் உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் ரயில் நிலையத்தின் கண்ணோட்டத்தை வழங்கும் சைகை மொழி வீடியோவைப் பார்ப்பதற்கான க்யூ.ஆர். கோடு (QR code) பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.