PM Kisan 13th Installment: விவசாயிகளுக்கு ரூ.16,800 கோடி நிதி உதவி! பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்
8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.16,800 கோடியை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.
நாடு முழுவதும் உள்ள 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 13வது தவணையாக தலா ரூ.2000 நிதியுதவியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் மூன்று தவணைகளாகக் கொடுக்கப்படுகின்றன.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் 13வது தவணையாக நாடு முழுவதும் உள்ள தகுதி பெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ.2000 இன்று விடுவிக்கப்படுகிறது.
ஹோலி பண்டிகை மற்றும் குறுவை சாகுபடி அறுவடை காலத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இந்த நிதி விடுவிக்கப்படுவதாக மத்திய அரசு சொல்கிறது.
இன்று கர்நாடக மாநிலத்தின் பெலகாவியில் நடைபெறும் நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி, கிசான் சம்மான் நிதி திட்டத்திற்காக ரூ.16,800 கோடி நிதியை விடுவிக்கிறார்.
இந்த திட்டத்தின் முந்தைய இரு தவணைகள் கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்பட்டன. இதுவரை கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் ரூ.2.25 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.