Zero gave the death blow to Gujarat wickets and won the Kolkata

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் விக்கெட் எதையும் இழக்காமல் குஜராத் லயன்ஸ் அணிக்கு மரண அடி கொடுத்து வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் அணியில் ஜேசன் ராய் - பிரென்டன் மெக்கல்லம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.1 ஓவர்களில் 22 ஓட்டங்கள் எடுத்தது. ஜேசன் ராய் 14 ஓட்டங்களில் வெளியேற, கேப்டன் சுரேஷ் ரெய்னா களமிறங்கினார்.

இதன்பிறகு இறங்கிய மெக்கல்லம், சாவ்லா பந்துவீச்சில் ஒரு சிக்ஸரையும், சுநீல் நரேன் பந்துவீச்சில் இரு பவுண்டரிகளையும் விளாசினார். அதைத் தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் வீசிய 6-ஆவது ஓவரில் ரெய்னா தன் பங்கிற்கு இரு பவுண்டரிகளை விளாசினார்.

இதன்பிறகு மெக்கல்லம் சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாச, 8 ஓவர்களில் 72 ஓட்டங்களை எட்டியது குஜராத்.

குல்தீப் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் மெக்கல்லம் அவுட்டானார். அவர் 24 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் எடுத்ததையடுத்து களம்புகுந்த ஆரோன் ஃபிஞ்ச் வந்த வேகத்தில் யூசுப் பதான் பந்துவீச்சில் இரு சிக்ஸர்களை விளாசினார். குல்தீப் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 8 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ரெய்னாவுடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். இதனிடையே ரெய்னா 41 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு தினேஷ் கார்த்திக் அதிரடியில் இறங்க, குஜராத்தின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

கிறிஸ் வோக்ஸ் வீசிய 19-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய தினேஷ் கார்த்திக், டிரென்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரில் இரு பவுண்டரிகளை விரட்டிய கையோடு ஆட்டமிழந்தார்.

கடைசி பந்தில் ரெய்னா பவுண்டரி அடிக்க, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் குவித்தது குஜராத்.

ரெய்னா 51 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் பேட் செய்த கொல்கத்தா அணியில் கேப்டன் கம்பீர் - கிறிஸ் லின் ஜோடி பட்டையைக் கிளப்பியது.

பிரவீண் குமார் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து அதிரடியில் இறங்கிய கிறிஸ் லின், குல்கர்னி, கோனி என எல்லோருடைய பந்துவீச்சையும் துவம்சம் செய்தார்.

மறுமுனையில் வேகம் காட்டிய கம்பீர், ஷிவில் கெளஷிக் வீசிய 6-ஆவது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார்.

இதனையடுத்து டுவைன் ஸ்மித் வீசிய 7-ஆவது ஓவரில் 3 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் பறக்கவிட்ட கிறிஸ் லின் 19 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதனால் 8-ஆவது ஓவரிலேயே 100 ஓட்டங்களை கடந்தது கொல்கத்தா.

தொடர்ந்து ஆடிய கம்பீர் 33 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். கம்பீரும், கிறிஸ் லின்னும் தொடர்ந்து ஓட்டங்களைக் குவிக்க, கொல்கத்தா 14.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 184 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று, குஜராத்திற்கு, கொல்கத்த மரண அடி கொடுத்தது.

ஐபிஎல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஓர் அணி வெற்றி பெற்றது இதுவே முதல்முறை.