ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங், கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் ஆடியபோது சரியாக பேட்டிங் ஆட முடியாமல் போனதற்கான காரணத்தை  தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதற்கான ஏலம் கடந்த 18ம் தேதி நடந்தது. இந்த ஏலத்தில் இந்திய இளம் வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு கடும் கிராக்கி நிலவிய நிலையில், பல முன்னாள் அதிரடி ஜாம்பவான்கள் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டனர்.

வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே போன்ற உள்நாட்டு இளம் வீரர்கள் மற்றும் ஹெட்மயர், பிராத்வெயிட், பூரான் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இங்கிலாந்தின் சாம் கரன், தென்னாப்பிரிக்காவின் கோலின் இங்க்ராம் ஆகியோர் நல்ல விலைக்கு ஏலம் போயினர். 

அதேநேரத்தில் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், புஜாரா, மனோஜ் திவாரி உள்ளிட்ட வீரர்கள் விலைபோகவில்லை. ஒருகாலத்தில் கோடிகளை கொட்டிக்கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங்கை இந்தமுறை எந்த அணியும் அடிப்படை விலைக்கு எடுக்கக்கூட முன்வரவில்லை. முதல் சுற்று ஏலத்தில் விலைபோகாத யுவராஜ் சிங்கை இரண்டாவது சுற்று ஏலத்தில் மும்பை அணி அடிப்படை விலையான ஒரு கோடிக்கு எடுத்தது.

இதையடுத்து யுவராஜ் சிங் அடுத்த சீசனில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடப்போகிறார். ஏலம் முடிந்ததும் யுவராஜ் சிங்கை அணியில் எடுத்தது குறித்து பெருமை தெரிவித்தார் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி. 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் தலைமையில் ஆடப்போகும் யுவராஜ் சிங், இந்த ஏலம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, இந்த முறை நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் ஆடப்போகிறேன் என்று எனக்கு ஒரு உணர்வு இருந்துகொண்டே இருந்தது. உண்மையாகவே சொல்கிறேன், மும்பை அணியில் இந்த ஆண்டு ஆடும் வாய்ப்பிற்காக காத்திருந்தேன். அது நிறைவேறிவிட்டது. என்னை பற்றி மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி பல நல்ல விஷயங்களை பேசியது என் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது என்றார். 

மேலும் கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் ஆடியபோது சரியாக ஆடமுடியாமல் போனதற்கான காரணம் குறித்து பேசிய யுவராஜ், ஆம்.. கடந்த சீசனில் நான் சரியாக ஆடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்கு காரணம், ஒரு நிரந்தரமான பேட்டிங் வரிசையில் களமிறங்காததுதான். நான்கு, ஐந்து போட்டிகளில் பேட்டிங் ஆடினேன். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வரிசையில் களமிறக்கப்பட்டேன். அதுதான் சரியாக ஆடமுடியாமல் போனதற்கு காரணம். அடுத்த சீசனில் சிறப்பாக ஆடவேண்டும். அந்த தருணத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்றார் யுவராஜ்.