தனது உடற்தகுதியை நிரூபிக்கும் விதமாக யுவராஜ் சிங், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இந்திய அணியின் அனுபவ வீரரான யுவராஜ் சிங், இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்தவர். இந்திய அணியில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து ஆடிவருகிறார். 2003, 2007, 2011 ஆகிய உலக கோப்பைகளில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளர்ப்பரியது. 

அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி, அரிய சாதனையை நிகழ்த்தியவர். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஓராண்டாக இந்திய அணியில் ஆடவில்லை. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் யுவராஜ் ஆடினார். அதன்பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

அதன்பிறகு கடந்த ஓராண்டாகவே யுவராஜ் சிங் இந்திய அணியில் ஆடவில்லை. யுவராஜ் சிங் யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக, அவரது உடற்தகுதி மீது விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்தன. 

இந்நிலையில், அவரது உடற்தகுதி குறித்த விமர்சனங்களையும் சந்தேகங்களையும் முன்வைத்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் யுவராஜ் சிங்.