பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. டி20 தொடரை 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து பாகிஸ்தான் அணி வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டி கைவிடப்பட்டதால் மற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என ஒருநாள் தொடர் சமனானது. 

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் ஹாரிஷ் சோஹைல் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். இவர்களின் சதத்தால் அந்த அணி 400 ரன்களை அசால்ட்டாக கடந்தது. 5 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது பாகிஸ்தான் அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜீட் ராவல் மற்றும் டாம் லதாம் ஆகிய இருவரும் நிதானமாக தொடங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். ராவல் 31 ரன்களிலும் லதாம் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரையும் யாசிர் ஷா வீழ்த்தினார். அதன்பிறகு அசத்தலாக வீசிய யாசிர் ஷா, நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை சரித்தார். ரோஸ் டெய்லர், நிகோல்ஸ், வாட்லிங், கோலின் டி கிராண்ட்ஹோம், இஷ் சோதி, வாக்னர், அஜாஸ் படேல், டிரெண்ட் போல்ட் ஆகிய அனைவரும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். 

50 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி 90 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. இவர்களில் கோலின் டி கிராண்ட்ஹோமை மட்டும் ஹசன் அலி வீழ்த்தினார். வாட்லிங் ரன் அவுட்டனார். மற்ற 8 விக்கெட்டுகளையும் யாசிர் ஷா தான் வீழ்த்தினார். வாட்லிங்கின் ரன் அவுட்டையும் அவர் தான் செய்தார். நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய, மறுமுனையில் செய்வதறியாது தனி ஒருவனாக கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நிராயுதபாணியாக நின்றார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். 

13 ஓவர்கள் வீசி 41 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார் யாசிர் ஷா. ஃபாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது.