மகளிர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார்? யார்? அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட அணி எது?
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் இன்று தொடங்கியுள்ள நிலையில், மகளிர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார்? யார்? அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட அணி எது? என்பது குறித்து பார்ப்போம்.

மகளிர் ஐபிஎல்
கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு Women's Premier League என்ற பெயரில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. பெண்கள் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகள் விளையாடுகின்றன. மகளிர் ஐபிஎல்லின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. மகளிர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார்? யார்? அதிக சொத்து மதிப்பு கொண்ட அணி எது? என்பது குறித்து பார்ப்போம்.
டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் JSW GMR கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் ஆகும். ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து டெல்லி கேபிடல்ஸ் அணியை ரூ.801 கோடிக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளது.
ஆண்கள் ஐபிஎல்லிலும் டெல்லி கேபிடல்ஸ் அணியை JSW GMR கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் தான் வைத்துள்ளது. JSW GMR பிரைவேட் லிமிடெட் கிரிக்கெட் மட்டுமில்லாது, கபடி மற்றும் கால்பந்து அணிகளையும் சொந்தமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் ஜெயண்ட்ஸ்
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1,289 ஆகும். மகளிர் ஐபிஎல் அணிகளில் அதிக மதிப்பு கொண்ட அணி இதுவாகும். அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் 2021ம ஆண்டு ஒரு ஆண்கள் ஐபிஎல் அணியை சொந்தமாக்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ்
ரிலையன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மும்பை இந்தியன்ஸ் அணியை வைத்துள்ளது. இந்நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் அணியை மகளிர் ஐபிஎல்லில் இரண்டாவது அதிகபட்ச ஏலத்தில் ரூ.912.99 கோடிக்கு வாங்கியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கிரிக்கெட்டுடன் ஆழமான வேரூன்றிய உறவைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஆண்கள் ஐபிஎல், தென்னாபிரிக்காவில் டி20 கிரிக்கெட் லீக், இங்கிலாந்தில் ஹண்டரட் லீக் என ஏராளமான கிரிக்கெட் அணிகளை ரிலையன்ஸ் குழுமம் சொந்தமாக கொண்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இந்தியாவின் முன்னணி மதுபான நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட், மகளிர் ஆர்சிபி அணியை சொந்தமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் அதன் துணை நிறுவனமான Royal Challengers Sports Private Limited மூலம் ஆர்சிபி அணியை இயக்குகிறது. இது ஏற்கெனவே ஆண்கள் ஆர்சிபி அணியையும் தன்வசம் வைத்துள்ளது. மகளிர் ஆர்சிபி அணியின் மதிப்பு ரூ.901 கோடி ஆகும்.
உபி வாரியர்ஸ் அணி
உபி வாரியர்ஸ் அணி கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்
இந்நிறுவன்ம் 2021ம் ஆண்டில் ஒரு ஆண்கள் ஐபிஎல் அணியின் உரிமையை பெற முயற்சித்து தோல்வி அடைந்தது. ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு லக்னோவை தளமாகக் கொண்ட உபி வாரியர்ஸ் அணியை ஏலத்தில் எடுத்தது சாதித்தது. உபி வாரியர்ஸ் அணியின் மதிப்பு ரூ.757 கோடி ஆகும்.