World Weightlifting India Gurudev Singh has created three new national achievements
உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் குருதீப் சிங் மூன்று புதிய தேசிய சாதனைகள் படைத்து அசத்தியுள்ளார்.
உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் அனாஹெய்ம் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் 105 கிலோவுக்கு கூடுதலான எடைப் பிரிவில் இந்தியாவின் குருதீப் சிங் பங்கேற்றார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 172, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 216 என மொத்தமாக 388 கிலோ எடையைத் தூக்கி 13-வது இடம் பிடித்தார். எனினும், அவர் தூக்கிய எடையானது இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் ஸ்னாட்ச் பிரிவில் குருதீப் 171 கிலோ தூக்கியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதைவிட ஒரு கிலோ அதிகமாக தூக்கி தனது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் சரப்ஜித் சிங் 215 கிலோ தூக்கியதே உச்சபட்சமாக இருந்தது. தற்போது குருதீப் 216 கிலோ தூக்கி அதை முறியடித்துள்ளார்.
அதேபோல் ஒட்டுமொத்தமாக சரப்ஜித் சிங் கடந்த 2010 காமன்வெல்த் போட்டியில் 384 கிலோ தூக்கியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது குருதீப் சிங் 388 கிலோ எடையை தூக்கி அந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.
இதனிடையே, இந்தப் போட்டியில் சீனியர் பிரிவில் தேசிய அளவிலான 12 புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
