செஸ் மட்டுமல்ல இதிலும் இவர் 'கிங்'; துளியும் பயமின்றி பங்கி ஜம்ப் செய்த குகேஷ்!
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற குகேஷ் சிங்கப்பூரில் பங்கி ஜம்ப் செய்து அசத்தியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று சாதனை படைத்தார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி என அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வந்தன. உலக அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த 18 வயதான குகேஷுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக சென்னை திரும்புவதற்கு முன்பு குகேஷ், சிங்கப்பூரில் தானே விரும்பி ஒரு சவாலை ஏற்றுக் கொண்டு செய்துள்ளார். அதுதான் பங்கி ஜம்பிங் (உடலில் கயிறு கட்டுக் கொண்டு பாலம் அல்லது உயரமான இடத்தில் இருந்து தலைகீழாக குதித்து அந்தரத்தில் தொங்குவது)
அதாவது சிங்கப்பூரில் உள்ள ஸ்கைபார்க் சென்டோசாவில் பங்கி ஜம்பிங் செய்த குகேஷ் அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார். குகேஷ் பங்கி ஜம்பிங் செய்தபோது, ''நான் உலக சாம்பியன்'' என்று சத்தமாக கத்துவதுபோல் வீடியோ அமைந்துள்ளது. செஸ் சாம்பியன் குகேஷ்க்கு பங்கி ஜம்பிங் செய்யும் ஆர்வம் எப்படி வந்தது? என நீங்கள் கேட்கலாம்.
இதற்கு ஒரு கதை இருக்கிறது. அதாவது உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 9 வது ஆட்டத்திற்குப் பிறகு குகேஷின் பயிற்சியாளரான போலந்து கிராண்ட்மாஸ்டர் க்ரெஸ்கோர்ஸ் கஜேவ்ஸ்கி மற்றும் குகேஷ் இருவரும் ஒரு கடற்கரையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிலர் பங்கி ஜம்பிங் செய்ய முயற்சிப்பதைப் பார்த்த க்ரெஸ்கோர்ஸ் கஜேவ்ஸ்கி, ''நீங்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றால் நான் பங்கி ஜம்பிங் செய்யப் போகிறேன்'' என்று குகேஷிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது குகேஷ் 'நானும் உங்களுடன் இணைந்து பங்கி ஜம்ப் செய்கிறேன்' என்று பயிற்சியாளரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி இப்போது துளியும் பயமின்றி சிங்கப்பூரில் பங்கி ஜம்பிங் செய்துள்ளார் குகேஷ். முன்னதாக இது குறித்து பேசிய குகேஷ், ''நான் உயரத்தை கண்டு அதிகமாக பயப்படுவேன். ஆனால் பங்கி ஜம்பிங் செய்ய போகிறேன் என்று கஜேவ்ஸ்கியிடம் எப்படி கூறினேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் நான் சாக்கு போக்குகளை தேடாமல் இதை செய்து முடிக்க வேண்டும்'' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.