உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்விட்சர்லாந்தின் சப்ரினாவுடன் மோதினார்.

இதில், 21-11, 21-12 என்ற நேர் செட்களில் சப்ரினாவை தோற்கடித்தார் சாய்னா.

சாய்னா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை சந்திக்கிறார்.

ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரான்ஸின் லூகாஸ் கோர்வீயுடன் மோதினார்.

இதில், 21-9, 21-17 என்ற நேர் செட்களில் லூகாஸ் கோர்வீயை தோற்கடித்தார் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றில் போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை சந்திக்கிறார்.

மற்றொரு ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத், இந்தோனேசியாவின் அந்தோணியுடன் மோதினார். இதில், 14-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் அந்தோணியை வீழ்த்தினார் சாய் பிரணீத்.