மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச, பேட் செய்த இந்தியாவில் தொடக்க வீராங்கனை மிதாலி ராஜ் 18 ஓட்டங்கள் சேர்த்து வீழ்ந்தார். உடன் வந்த ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 67 ஓட்டங்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார்.

எனினும் மறுமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 13 ஓட்டங்கள் , ஜெமிமா ரோட்ரிகஸ் 1 ஓட்டத்தில் வெளியேற, அஞ்சும் பாட்டீல் மட்டும் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 35 ஓட்டங்கள் சேர்த்தார்.

இறுதியாக வேதா கிருஷ்ணமூர்த்தி 15 ஓட்டங்கள் , ஷிகா பாண்டே ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

ஆஸ்திரேலிய தரப்பில் கார்டனர், பெர்ரி தலா 2 விக்கெட்டுகளும், கிம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.
 
பின்னர் தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா முதலில் சற்று தடுமாறியது. தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான அலிசா ஹீலி 4 ஓட்டங்கள், பின்னர் வந்த ஆஷ்லே கார்டனர் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அவர்களை ஜுலன் கோஸ்வாமி வெளியேற்றினார்.

பின்னர், தொடக்க வீராங்கனை பெத் மூனியுடன் இணைந்த எலிஸ் விலானி, விக்கெட் சரிவை தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 79 ஓட்டங்கள் சேர்த்தது. பெத் மூனி 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, விலானி 39 ஓட்டங்களுக்கு வீழ்ந்தார்.
 
இறுதியாக கேப்டன் மெக் லேனிங் 35 ஓட்டங்கள், ரேச்சல் ஹெய்ன்ஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். 

இந்திய தரப்பில் ஜுலன் கோஸ்வாமி 3, பூனம் யாதவ் ஒரு விக்கெட் சாய்த்தனர்.

அண்மையில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணியிடம் முற்றிலுமாக இழந்திருந்த இந்தியா, தற்போது முத்தரப்பு டி20 தொடரையும் அதே அணியிடம் தோல்வி கண்டு தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.