மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான 6-வது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்றன. மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 107 ஓட்டங்களில் சுருண்டது.

இதனையடுத்து, 108 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்திய அணியின் வீராங்கனைகள் அபாரமாக பந்து வீசினர். 3.5 ஓவர்கள் வீசிய இந்தியாவின் அனுஜா பாட்டீல் 21 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இவருக்கு அடுத்தபடியாக ராதா யாதவ், தீப்தி சர்மா, பூனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். பூஜா வஸ்திராகர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரரான டி.வியட் 22 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களம் கண்ட மிதாலி ராஜ் 6 ஓட்டங்களில் நடையைக் கட்டியபோதிலும், மற்றொரு இளம் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 62 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

கடைசி வரை அவரும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரும் 20 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெமிமா ரோட்ரிக் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை என்றாலும் கடைசி லீக் ஆட்டத்தில் அந்த அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மும்பையில் நாளை மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.