Wimbledon tennis Federer and Kerber advanced to the next round ...
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் ஆகியோர் தங்களது பிரிவில் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரர் தனது 2-வது சுற்றில் செர்பியாவின் டுசான் லாஜோவிக்குடன் மோதினார்.
விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் ஃபெடரர் 7-6(0), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று அசத்தினார்.
அவர் தனது 3-வது சுற்றில் ஜெர்மனியின் மிஸ்கா ஸவரெவை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் உலகின் 6-ஆம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச், 3-6, 7-6(7), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் சோவியத் யூனியனின் மிகைல் யூஸ்னியை வீழ்த்தினார்.
ரயோனிச் தனது 3- ஆவது சுற்றில் ஸ்பெயினின் ஆல்பர்ட் ரமோஸை எதிர்கொள்கிறார்.
நேற்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகுட், 6-4, 7- 6(3), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கெய் நிஷிகோரியை வீழ்த்தினார்.
மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் லக்ஸம்பெர்க்கின் கில்லெஸ் முல்லர் 7-6(4), 7-5, 4-6 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் அல்ஜாஸ் பெடேனை வீழ்த்தினார்.
அதேபோல், குரோஷியாவின் மரின் சிலிச் 6-4, 7-6(3), 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தினார்.
இதனிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் தனது 2-வது சுற்றில் பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் ஃப்ளிப்கென்ஸை 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் எஸ்டோனியாவின் அன்னா கோன்டாவிட் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டரியா கஸாட்கினாவை வீழ்த்தினார்.
இதனிடையே, மகளிர் பிரிவு 3-வது சுற்று ஒன்றில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-4, 7-6(7) என்ற செட் கணக்கில் சீனாவின் பெங் ஷுவாயை வீழ்த்தினார்.
உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் கரினா வித்தாஃப்டை வீழ்த்தினார்.
அதேபோல், உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் ஸ்வெட்டனா பிரோன்கோவாவை வெற்றிக் கொண்டார்.
