இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் செய்ய தவறிய ஒரு விஷயத்திற்கு நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மனம் வருந்தியுள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. முதல் மூன்று போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் நியூசிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி இந்திய அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் மட்டும் படுமோசமாக ஆடி, படுதோல்வியடைந்தது. 

அந்த படுதோல்வியிலிருந்து ஒரு அணியாக மீண்டெழுந்து, கடைசி போட்டியில் மீண்டும் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. 18 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த போதிலும் அதிலிருந்து மீண்டெழுந்து 252 ரன்களை எட்டிய இந்திய அணி, அந்த இலக்கை எட்டவிடாமல் நியூசிலாந்து அணியை சுருட்டி, 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

கடைசி போட்டியில், 253 ரன்கள் என்ற எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, விரைவில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும், வில்லியம்சன் - லதாம் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடியது. அந்த ஜோடியை உடைத்த பிறகு மளமளவென விக்கெட்டுகள் சரிந்தாலும் பின்னர் நீஷம் தனி ஒரு வீரராக அடித்து ஆடி இந்திய அணியை அச்சுறுத்தினார். அவரை சமயோசித செயலால் ரன் அவுட் ஆக்கியதை போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியது. எஞ்சிய விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து அணியின் மூன்றாவது விக்கெட்டாக அந்த அணியின் அனுபவ வீரரும் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பவருமான ரோஸ் டெய்லர் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 11வது ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அதற்கு ரிவியூ கேட்க, மறுமுனையில் நின்ற கேப்டன் வில்லியம்சனிடம் கலந்தாலோசித்துவிட்டு, பின்னர் ரிவியூ கேட்காமல் சென்றுவிட்டார். ஆனால் பின்னர் அது அவுட்டில்லை என்பது தெரியவந்தது. பந்து ஸ்டம்பிற்கு மேலே சென்றது ரிவியூவில் தெரிந்தது. ஆனால் டி.ஆர்.எஸ் இருந்தும் அதை பயன்படுத்தாததால் டெய்லர் அவுட்டானார். ஒருவேளை டெய்லர் களத்தில் நின்றிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம். 

இந்த சம்பவம் குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் நல்ல ஃபார்மில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார். அவரது விக்கெட்டுக்கு ரிவியூ கேட்காமல் தவறு செய்துவிட்டோம் என்று நினைக்கும்போது எரிச்சலாகவும் வருத்தமாகவும் இருக்கிறது என்று விரக்தியை வெளிப்படுத்தினார். 

மேலும் டெய்லர் என்னிடத்தில் பந்து ஸ்டம்புக்கு மேலாக சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. அதேநேரத்தில் அம்பயர் கால் மாதிரி தெரிகிறது என்றார். நானும் ரிவியூ கேட்க சொல்லவில்லை. அந்த ரிவியூ கேட்டிருந்திருக்கலாம். நாங்கள் செய்த தவறுகளில் இது மிகப்பெரிய தவறு என்று வில்லியம்சன் வருந்தினார். 

பொதுவாக பந்துவீசப்பட்ட லைன் தொடர்பான தீர்ப்புகளில் அம்பயர் காலுக்கு விடப்படும். ஆனால், பந்து ஸ்டம்பை மிஸ் செய்யும் நிலையில், ரிவியூ செய்தால் அது கண்டிப்பாக அவுட் இல்லை என்றுதான் மூன்றாவது அம்பயரிடமிருந்து தீர்ப்பு வந்திருக்கும்.