who will replace kohli in afghanistan test match
முழுநேர டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, வரும் ஜூன் மாதம் 14ம் தேதி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது.
அதற்கு அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடுவதற்காக, அங்கு நடக்கும் கவுண்டி போட்டிகளில் ஆட உள்ளார் இந்திய அணி கேப்டன் கோலி. கவுண்டி போட்டிகளில் ஆடுவதால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்தும் அதன்பிறகு நடக்க உள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டி மற்றும் அயர்லாந்துடனான டி20 போட்டிகள் ஆகியவற்றிற்கான வீரர்கள் தேர்வு இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது.
விராட் கோலி விலகியுள்ளதால், ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட வாய்புள்ளது. கோலிக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரோ ரோஹித்தோ சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரோஹித் சோபிக்கவில்லை. ரோஹித்துக்கு பதிலாக ரஹானேவை சேர்த்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது. பின்னர் ரோஹித்துக்கு பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டார். ரஹானே சிறந்த டெஸ்ட் வீரர். ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் ரஹானே தான் கேப்டன் என்பதால், கோலிக்கு பதிலாக ரோஹித்தா? ஷ்ரேயாஸ் ஐயரா? என்பது கேள்வியாக உள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கும் எனவும் ஐபிஎல் தொடரில் சிறப்பாகவும் அதிரடியாகவும் ஆடிவரும் ராயுடுவிற்கு அணியில் இடமளிக்கப்படும் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
