காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா ஆடவருக்கான 25 மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இளம் வயது இந்தியர் என்ற சாதனையை எட்டினார்.

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.

இதில், பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 25 மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா (15) மற்றும் நீரஜ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இருவருமே இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய நிலையில், நீரஜ் குமார் ஒரு கட்டத்தில் தடுமாற, தொடர்ந்து முன்னேறிய அனிஷ் பன்வாலா இறுதியில் 30 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அவரது இந்தப் புள்ளிகள் கேம் ரெக்கார்டு ஆகும். 

இப்பிரிவில் ஆஸ்திரேலியாவின் செர்கேய் எவ்கிளெவ்ஸ்கி வெள்ளியும், இங்கிலாந்தின் சாம் கோவின் வெண்கலமும் வென்றனர்.

அனிஷுக்கு முன்பாக, காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இளம் வயது இந்தியர் என்ற பெருமையை இப்போட்டியில் பங்கேற்றிருந்த மானு பேக்கர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவரான அனிஷுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் நிலையில், காமன்வெல்த் போட்டி காரணமாக மூன்று தேர்வுகளை மட்டும் பின்னர் அவர் தனியே எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மகளிருக்கான 50 மீ ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின தேஜஸ்வினி சாவந்த், அஞ்சும் முட்கில் ஆகியோர் போட்டியிட்டனர். அவர்கள் இருவருமே இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்த, தேஜஸ்வினி 457.9 புள்ளிகளுடன் முதலிடமும், அஞ்சும் முட்கில் 455.7 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்தனர். 

ஸ்காட்லாந்தின் சியோனைட் மெகின்டோஷ் 444.6 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். இதில் தேஜஸ்வினி பெற்ற 457.9 புள்ளிகள் புதிய காமன்வெல்த் சாதனையாகும். மகளிருக்கான டிராப் பிரிவில் களம் கண்ட இந்தியாவின் ஷ்ரேயசி சிங், இறுதிச்சுற்றில் 5-ஆம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.