கங்காரு கோட்டையில் தரமான சம்பவம்; ஆஸி. பவுலர்களை ஓடவிட்ட 21 வயசு பையன்; யார் இந்த நிதிஷ் குமார் ரெட்டி?
இந்திய இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி தனது முதல் டெஸ்ட் தொடரிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். யார் இந்த நிதிஷ் குமார் ரெட்டி என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
நிதிஷ் குமார் ரெட்டியின் சம்பவம்
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. டாப் ஆர்டரில் ஜெய்ஸ்வால் (82 ரன்) தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்ததால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 221 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து பரிதவித்தது.
'அவ்வளவுதான் இந்திய அணி பாலோ ஆன் ஆகி விடும்; இந்த மேட்ச்சும் போச்சு' என இந்திய ரசிகர்கள் புலம்பித் தவித்த நிலையில், 'யாமிருக்க பயமேன், இந்த ரெட்டி இருக்க பயம் ஏன்'' என்று கூறுவதுபோல் ஆஸ்திரேலியா பவுலர்களின் பந்துகளை விளாசித்தள்ளி தனது முதல் டெஸ்ட் தொடரிலேயே சதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துளார் நிதிஷ் குமார் ரெட்டி.
யார்ரா இந்த பையன்
10 பவுண்டரி, 1 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்து நிதிஷ் குமார் ரெட்டி களத்தில் உள்ளார். ரெட்டியின் அதிரடியால், வாஷிங்டன் சுந்தரின் கணிசமான பங்களிப்பால் (50 ரன்) இந்திய அணி 221/7 என்ற நிலையில் இருந்து 358/9 என்ற நிலைக்கு வந்துள்ளது. வெறும் 21 வயதான நிதிஷ் குமார் ரெட்டி தனது போராட்டக் குணத்தின் மூலம் பலகோடி இந்தியர்களின் மனதில் இடம்பிடித்தது மட்டுமின்றி, 'யார்ரா இந்த பையன்' என எதிரணி வீரர்களையும் மிரளச்செய்துள்ளார்.
இந்த தொடர் முழுவதும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற அனுபவ வீரர்களே ரன்கள் அடிக்கத் தடுமாறி வரும் நிலையில், இளம் வயதிலும் முதிர்ச்சியுடன் விளையாடி அணியை கரைசேர்க்க முடியும் என்று கிரிக்கெட் உலகுக்கு பரைசாற்றியுள்ளார் நிதிஷ் குமார் ரெட்டி. இன்று உலகம் முழுவதும் பேசும்பொருளாகியுள்ள இந்த ரெட்டி யார் என்பது குறித்து பார்ப்போம்.
யார் இந்த நிதிஷ் குமார் ரெட்டி
நிதிஷ் குமார் ரெட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை முத்தலா ரெட்டி ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்தார். அம்மா வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது நாட்டம் கொண்ட ரெட்டி, எப்போதும் பேட்டும் கையுமாக சுற்றித்திரிந்துள்ளார்.
மகனின் விருப்பத்தை கண்ட பெற்றோர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்தனர். மகன் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக முத்தலா ரெட்டி தனது வேலையையே துறந்தார் என கூறப்படுகிறது.தீவிர பயிற்சி மற்றும் பெற்றோரின் ஊக்கத்தால் மாவட்ட அளவிலான கிரிக்கெட்டில் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சின் மூலம் தனது திறமையை நிரூபித்த ரெட்டி, வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்தார்.
எம்எஸ்கே பிரசாத் செய்த உதவி
இவரின் திறமையை பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ்கே பிரசாத், நிதிஷ் குமார் ரெட்டியை கடப்பாவில் உள்ள ஏசிஏ கிரிக்கெட் அகாடமியில் சேர்க்க உதவினார். இங்கு இருந்து முழுமையான கிரிக்கெட் வீரராக உருவெடுத்த ரெட்டி, ஆந்திர அணியில் இடம்பிடித்தார். ரஞ்சி கோப்பையில் ஆந்திர அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆந்திராவுக்காக ரஞ்சிக் கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடி 366 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு சதமும் அடங்கும். 17 முதல் தர போட்டிகளில் விளையாடி 566 ரன்கள் எடுத்தார். அங்கு தனது திறமையை வெளிக்காட்டியதால் 19 வயதுக்கு உட்பட்டவருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது.
ஐபிஎல்லில் ரெட்டியின் கேப்டன் கம்மின்ஸ்
நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க ஐபிஎல்லும் முக்கிய காரணமாகும். முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் ரெட்டியை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. 2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 13 போட்டிகளில் இரண்டு அரைசதத்துடன் 303 ரன்கள் எடுத்த நிதிஷ் குமார் ரெட்டி, 3 விக்கெட்டும் வீழ்த்தி ஆல்ரவுண்டர் திறமையை வெளிக்காட்டினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 41 ரன்கள், 42 மற்றும் 42 என அடித்த மூன்று அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நிதிஷ் குமார் ரெட்டி, இன்று வரலாற்று சிறப்புமிக்க சதம் அடித்து தனது பெயரை உலகம் முழுவதும் பதிய செய்துள்ளார். மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆவார். ஐபிஎல்லில் அவருக்கு கீழ் விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி, இப்போது கம்மின்ஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.