உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஜமைக்காவின் உசேன் போல்ட் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்ற நிலையிலும் அவர் தான் பெஸ்ட் என்று அவரது ரசிகர்கள் மைதானத்தில் கர்ஜித்தனர்.

பதினாறாவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் 100 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் 9.92 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பெற்றார். இதனால் அவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.

மற்றொரு அமெரிக்க வீரரான கிறிஸ்டியான் கோல்மான் 9.94 விநாடிகளில் இலக்கை எட்டி 2-வது இடத்தைப் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஆனால், தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட உசேன் போல்ட், 9.95 விநாடிகளில் இலக்கை எட்டி 3-வது இடத்தையே பிடித்ததால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு தடகளத்திலிருந்து உசேன் போல்ட் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவரால் தங்கம் வெல்ல முடியாமல் போனதற்கு அவரைவிடவும் அவரது ரசிகர்கள் பெரும் வருத்தம் அடைந்தனர். எனினும் ரசிகர்கள் உசேன் போல்டுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்து கர முழக்கம் எழுப்பி மைதானத்தை அதிர வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உசேன் போல்ட் கூறியது:

"முதலிடத்தைப் பிடிக்க முடியாமல் போனதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.