when will start ipl twelth season

2018 ஐபிஎல் முடிந்த நிலையில், 2019 ஐபிஎல் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடர் பொதுவாக ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி மே மாதம் கடைசி வாரத்தில் முடிவது வழக்கம். ஆனால் அடுத்த ஆண்டு மே 30ம் தேதி உலக கோப்பை தொடங்குகிறது. எனவே அதற்கு முன்னதாக வீரர்களுக்கு ஓய்வு தேவை. அதுமட்டுமல்லாமல், மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. 

எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அடுத்த ஐபிஎல் சீசன், வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்னதாக தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி தொடங்கிய ஐபிஎல் அடுத்த ஆண்டு, மார்ச் 29ம் தேதி தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவாக முடித்தால்தான், உலக கோப்பைக்கு முன்னதாக வீரர்கள் ஓய்வெடுக்க முடியும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடக்க இருப்பதால், அப்போது ஐபிஎல் நடந்தால் போலீஸ் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், வெளிநாட்டிற்கு மாற்றப்படுமோ என ரசிகர்கள் பயப்படுகின்றனர். கடந்த 2009 மற்றும் 2014 மக்களவை தேர்தல்களின்போது முறையே ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் இந்த முறை மொத்த தொடரையும் மாற்றாமல், தேர்தல் நேரத்திலான சில போட்டிகளை மட்டுமே வெளிநாட்டிற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால் மொத்த ஐபிஎல் தொடரும் வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டுவிடுமோ என ரசிகர்கள் பயப்பட தேவையில்லை.