இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஜெர்சியில் கருப்பு பட்டை அணிந்து ஆடிவருகின்றனர். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. 

இதையடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, மளமளவென விக்கெட்டுகளை இழந்து ரன்களை சேர்க்க திணறிவருகிறது. கடந்த போட்டியில் சதமடித்த அந்த அணியின் வீரர் ஷாய் ஹோப், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார். 42 ஓவருக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்களை எடுத்து அந்த அணி ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் அந்த அணியின் வீரர்கள் ஜெர்சியில் கருப்பு பட்டை அணிந்து ஆடிவருகின்றனர். முதல் மற்றும் இரண்டாவது உலக போரில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட கரீபிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த போர்களில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்தனர். அதனால் கரீபிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கருப்பு வரலாற்று மாதம் கடைபிடிக்கப்படுகிறது. அதற்காகத்தான் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஜெர்சியில் கருப்பு பட்டை அணிந்து ஆடிவருகின்றனர்.