முதல் போட்டியில் மிரட்டலாக ஆடி சதமடித்த பிரித்வி ஷாவை வீழ்த்த வியூகங்கள் வகுத்துவிட்டதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் சேஸ் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா, முதல் போட்டி என்ற பதற்றமெல்லாம் இல்லாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார். 

தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை அடித்தும் அதேநேரத்தில் தெளிவாகவும் ஆடினார் பிரித்வி ஷா. பல நல்ல ஷாட்களை ஆடி முன்னாள் ஜாம்பவான்களின் கவனத்தை ஈர்த்தார். அபாரமாக ஆடி சதமடித்த பிரித்வி 134 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது சிறப்பான ஆட்டம், போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த உதவிகரமாக இருந்தது. 

இந்நிலையில், இரண்டாவது போட்டியில் அவரை வீழ்த்துவதற்கு வியூகங்கள் வகுத்துள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் சேஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த போட்டியில் பிரித்வி ஷா முதன்முறையாக ஆடியதால் அவரது பேட்டிங் டெக்னிக் குறித்து எங்களுக்கு தெரியாது. ஆனால் முதல் போட்டி முடிந்ததும் அவரது பேட்டிங்கை பார்த்து அவரது பலங்கள் என்ன? எந்தெந்த ஏரியாவில் ஸ்ட்ராங்காக இருக்கிறார் என்பதை எல்லாம் அறிந்துகொண்டோம். எனவே கடந்த முறை செய்த தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டதால் எங்கள் பவுலர்கள் அடுத்த போட்டியில்(ஹைதராபாத்தில் நடந்துவரும் போட்டி) சிறப்பாக பந்துவீசுவார்கள். பிரித்வி ஷா மற்றும் சில பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து திட்டங்களை வகுத்துள்ளோம். குறிப்பாக பிரித்விக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம் என்று சேஸ் தெரிவித்துள்ளார்.