நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர் திலக் வர்மா கடைசி இரு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என BCCI தெரிவித்துள்ளது. திலக் வர்மாவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் மீதமுள்ள போட்டிகளிலும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியுடன் தொடர்வார். காயமடைந்த திலக் வர்மாவுக்குப் பதிலாக முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டுமே ஐயர் முதலில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் அடுத்த இரு போட்டிகளுக்கும் இந்திய அணியுடன் பயணிப்பார். விஜய் ஹசாரே டிராபியின் போது ஏற்பட்ட வயிற்றுத் தசைப்பிடிப்பு காரணமாக திலக் வர்மா இந்த மாத தொடக்கத்தில் ராஜ்கோட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஓய்வில் இருக்கும் அவர், காயத்தில் இருந்து மீள்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைக்கு முன்பு அவர் முழு உடற்தகுதியை எட்டுவார் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருநாள் அணியின் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயருக்கு, தற்போதைய தொடரில் இதுவரை ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2023 டிசம்பருக்குப் பிறகு ஐயர் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன் சுந்தரின் காயம்

அதே போன்று, ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் உலகக் கோப்பையில் பங்கேற்பாரா என்பதில் இன்னும் தெளிவற்ற நிலை நீடிக்கிறது. பரோடாவில் நடந்த ஒருநாள் போட்டியின் போது விலா எலும்பிற்குக் கீழே ஏற்பட்ட அசௌகரியத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட ஸ்கேனில், 'சைட் ஸ்ட்ரெய்ன்' காயம் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது ஓய்வில் இருக்கும் அவர், மேலதிக சிகிச்சைக்காக விரைவில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் செல்வார்.

சுந்தருக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய பிஷ்னோய், கவுகாத்தியில் நடந்த போட்டியில் நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுந்தர் உலகக் கோப்பையைத் தவறவிட்டால், தேர்வாளர்களின் முதல் தேர்வாக பிஷ்னோய் இருப்பார்.

புதுப்பிக்கப்பட்ட இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவி பிஷ்னோய்.