முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்த 322 ரன்களையே இரண்டாவது போட்டியில் அந்த அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இந்திய அணியின் கேப்டன் கோலி அபாரமாக ஆடி இந்த போட்டியிலும் சதம் அடித்தார்.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் ஆடியது. கடந்த போட்டியில் அபாரமாக ஆடி 152 ரன்களை குவித்த ரோஹித் சர்மா இந்த முறை வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து தவானும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை கோலியும் ராயுடுவும் சேர்ந்து மீட்டெடுத்தனர். இந்த ஜோடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். நன்றாக ஆடிவந்த ராயுடு 73 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து கோலியுடன் தோனி ஜோடி சேர்ந்தார்.

அபாரமாக ஆடிய கோலி, இந்த போட்டியிலும் சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் போட்டியில் 37வது சதத்தை கோலி பதிவு செய்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களையும் கடந்தார். இந்த மைல்கல்லை எட்டும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். சச்சின், கங்குலி, டிராவிட்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடக்கும் நான்காவது இந்திய வீரர் கோலி.

கோலி ஒருபுறம் சிறப்பாக மறுபுறம் மீண்டும் விக்கெட்டுகள் சரிந்தன. தோனி 20 ரன்களிலும் ரிஷப் பண்ட் 17 ரன்களிலும் ஜடேஜா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் கடைசி 3 ஓவர்களில் விராட் கோலி ருத்ரதாண்டவம் ஆடினார். சிக்ஸர்களாக விளாசி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கோலியின் அதிரடியால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 321 ரன்களை எட்டியது. கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 157 ரன்கள் குவித்தார். இதையடுத்து கடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்த 322 ரன்களே இந்த போட்டியிலும் அந்த அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பவல் மற்றும் ஹேம்ராஜ் தொடக்கம் முதலே அடித்து ஆட தொடங்கினர். ஆனால் இந்த ஜோடி நிலைக்கவில்லை. பவல் 18 ரன்களிலும் ஹேம்ராஜ் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் அனுபவ வீரர் சாமுவேல்ஸ் அதிரடியாக ஆடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். ஆனால் 3 பவுண்டரிகளை விளாசிய சாமுவேல்ஸும் நிலைக்கவில்லை. வெறும் 13 ரன்களில் குல்தீப்பின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

அதன்பிறகு ஷாய் ஹோப்புடன் ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். கடந்த போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்த ஹெட்மயர் இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடிவருகிறார். 16 ஓவருக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிவருகிறது. ஹெட்மயர் இந்த போட்டியிலும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிவருகிறார்.