இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி, இளம் வீரர் ஹெட்மயரின் அதிரடி சதத்தால் 322 ரன்களை குவித்தது. ஆனால் ஹெட்மயர் ஆடிய ஆட்டத்திற்கு அவர் சதமடித்ததும் அவுட்டாகாமல் இருந்திருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 360 ரன்கள் எடுத்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதிரடியாக ஆடி ஆதிக்கம் செலுத்திய ஹெட்மயர், 106 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் அவுட்டானார். 39வது ஓவரில் அவர் அவுட்டானார். அதன்பிறகு 11 ஓவர்கள் எஞ்சியிருந்தன. ஒருவேளை அவர் களத்தில் இருந்திருந்தால் வெஸ்ட் இண்டீஸ் மெகா ஸ்கோரை எட்டியிருக்கும்.

ஆனாலும் 322 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் குறைந்திருந்தாலும், 322 ரன்கள் என்பதில் ஓரளவிற்கு திருப்தியடைந்தது. வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை அந்த அணிக்கு இருந்தது. அதற்கேற்றாற்போலவே இரண்டாவது ஓவரில் தவானின் விக்கெட்டையும் வீழ்த்தியது. அதன்பிறகு அந்த அணியின் நம்பிக்கை வளர்ந்தது. எனினும் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணிக்கு இந்திய மண்ணில், அதுவும் பேட்டிங்கிற்கு சாதகமான குவாஹத்தி ஆடுகளத்தில் 322 ரன்கள் என்பது பெரிய இலக்கு அல்ல. 

அதை நிரூபிக்கும் விதமாக ரோஹித்தும் கோலியும் வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை பிரித்து மேய்ந்தனர். அபாரமாக ஆடி சதமடித்த இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 246 ரன்களை சேர்த்து பல சாதனைகளையும் குவித்தனர். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால் போட்டி ஒரு சார்புடையதாக அமைந்து 42 ஓவரிலேயே இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 

நல்ல ஸ்கோரை அடித்தும் படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர், போட்டிக்கு பின்னர் பேசும்போது, நாங்கள் போன வேகத்திற்கு கடைசியில் அடித்தது 30 ரன்கள் குறைவுதான் என்றாலும் 322 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக எது நல்ல ஸ்கோர் என்பதை கணிக்க முடியாது. தவானின் விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்தியபோதும் ரோஹித்தும் கோலியும் சேர்ந்து சிறப்பாக ஆடி வெற்றியை பறித்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓரிரு சீனியர் வீரர்களே உள்ளனர். மற்ற அனைவருமே இளம் வீரர்கள். எனவே அனுபவமின்மையும் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். இதுகுறித்து பேசிய ஹோல்டர், அனுபவமின்மையும் முக்கிய காரணியாக திகழ்கிறது. எனினும் கடந்த தோல்விகளிலிருந்து விரைவாக கற்றுக்கொண்டு தவறுகளை திருத்திக்கொள்வோம். தோல்வியையும் கடந்து பல நேர்மறையான விஷயங்களும் எங்கள் அணியில் உள்ளன என்று ஹோல்டர் தெரிவித்துள்ளார்.