இந்தியாவை, விளையாட்டில் சிறந்து விளங்கும் நாடாக மாற்றும் வகையில் வீரர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலப்படுத்தும் வாய்ப்புகளை மாநிலத் துறைகளுடன் சேர்ந்து வழங்குவோம் என்று புதிதாக பதவியேற்ற விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் கூறினார்.

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்து பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்தார். அதன்படி, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக இருந்த ராஜ்யவர்தன் சிங் ராத்தோர், விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

விளையாட்டுத் துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ராஜ்யவர்தன் ராத்தோர் நேற்று கூறியது:

“கிராமங்களில் நடைபெறும் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள் என அனைத்துத் தரப்பிலும் பதக்கம் வெல்வதே நமது குறிக்கோள். எனவே, அதற்கான சிறந்த வாய்ப்புகளை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் வகையில் மாநில விளையாட்டுத் துறைகளுடன் இணைந்து பணியாற்றுவோம்.

போட்டியாளர்களை வீழ்த்துவது, விளையாட்டுத் திறனை அதிகரித்துக் கொள்வது ஆகியவையே ஒரு விளையாட்டு வீரர் சந்திக்கும் சவாலாகும்.

ஒரு இளைஞரின் விளையாட்டுத் திறனை மட்டுமல்லாது, அவரது தனிப்பட்ட ஆளுமைத் திறனையும் மேம்படுத்துவதே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் பணி.

இந்தியாவை, விளையாட்டில் சிறந்து விளங்கும் நாடாக மாற்றும் வகையில் வீரர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலப்படுத்தும் வாய்ப்புகளை மாநிலத் துறைகளுடன் சேர்ந்து வழங்குவோம்” என்று கூறினார்.