- Home
- Sports
- Sports Cricket
- 33 பந்துகளில் சதம் விளாசிய இஷான் கிஷன்.. சிக்சர் மழை.. ஒரே ஒரு பந்தில் மிஸ்ஸான வரலாற்று சாதனை!
33 பந்துகளில் சதம் விளாசிய இஷான் கிஷன்.. சிக்சர் மழை.. ஒரே ஒரு பந்தில் மிஸ்ஸான வரலாற்று சாதனை!
இஷான் கிஷனின் இந்த அதிரடி சதம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இந்தியரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாகும். அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக பீகார் கேப்டன் சகிபுல் கனி 32 பந்துகளில் அடித்த சதத்திற்கு அடுத்தபடியாக இது அமைந்துள்ளது.

இஷான் கிஷன் 33 பந்துகளில் சதம்
அகமதாபாத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி போட்டியில் ஜார்கண்ட் அணிக்காக களமிறங்கிய இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் கர்நாடகா அணிக்கு எதிராக 33 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். இந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் வெறும் 39 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார். இதில் ஏழு பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்டிரைக் ரேட் 320.51 ஆகும்.
ஒரு பந்தில் வரலாற்று சாதனை மிஸ்ஸிங்
இஷான் கிஷனின் இந்த அதிரடி சதம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இந்தியரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாகும். புதன்கிழமை அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக பீகார் கேப்டன் சகிபுல் கனி 32 பந்துகளில் அடித்த சதத்திற்கு அடுத்தபடியாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் ஒரு பந்தில் வரலாற்று சாதனையை இஷான் கிஷன் தவற விட்டுள்ளார்.
இந்திய அணியில் இடம் பிடித்த இஷான் கிஷன்
சையத் முஷ்டாக் அலி டிராபி பட்டத்தை ஜார்கண்ட் அணிக்கு முதல்முறையாக வென்று கொடுத்த சில நாட்களில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கிஷன் மீண்டும் இடம்பிடித்தார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் 517 ரன்கள் குவித்த கிஷனின் சமீபத்திய ஃபார்ம் சிறப்பாக உள்ளது. இதில் ஹரியானாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அடித்த வெற்றி சதமும் அடங்கும்.
வைபவ் சூர்யவன்ஷியின் ருத்ரதாண்டவம்
முன்னதாக இன்று இந்தியாவின் இளம் அதிரடி வீரர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியும் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருந்தார். வைபவ் சூர்யவன்ஷி வெறும் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 15 சிக்சர்கள் விளாசி 190 ரன்கள் எடுத்தார்.
வெறும் 54 பந்துகளில் 150 ரன்களை எட்டிய வைபவ், டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக 150 ரன்கள் எடுத்த உலக சாதனையையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

