- Home
- Sports
- Sports Cricket
- வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் மின்னல் வேக சதம்.. 14 வயதில் டி வில்லியர்ஸ் சாதனையை தூள் தூளாக்கி மாஸ்!
வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் மின்னல் வேக சதம்.. 14 வயதில் டி வில்லியர்ஸ் சாதனையை தூள் தூளாக்கி மாஸ்!
இந்திய இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். 14 வயதில் டி வில்லியர்ஸ் சாதனையை தூள் தூளாக்கி மாஸ் காட்டியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேக சதம்
இந்திய இளம் வீரர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மின்னல் வேக சதம் அடித்து அசத்தியுள்ளார். விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டியின் பிளேட் லீக் போட்டியில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் வெறும் 36 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
15 சிக்சர்களை விளாசினார்
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேனின் இரண்டாவது வேகமான சதம் இதுவாகும். தொடர்ந்து அதிரடியில் பட்டயை கிளப்பிய வைபவ் சூர்யவன்ஷி வெறும் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 15 சிக்சர்கள் விளாசி 190 ரன்கள் எடுத்து அவுட்டாகி இரட்டை சதத்தை தவற விட்டார். வெறும் 54 பந்துகளில் 150 ரன்களை எட்டிய வைபவ், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக 150 ரன்கள் எடுத்த உலக சாதனையையும் படைத்துள்ளார்.
ஏபி டிவில்லியர்ஸ் சாதனையை முறியடித்தார்
மேலும் 64 பந்துகளில் 150 ரன்கள் எடுத்த ஏபி டிவில்லியர்ஸின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இந்திய வீரரின் வேகமான சதத்திற்கான சாதனை பஞ்சாபின் அன்மோல்பிரீத் சிங் வசம் உள்ளது. அவர் 2024 விஜய் ஹசாரே டிராபியில் அருணாச்சலத்திற்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்தார். அந்த சாதனையை 1 பந்தில் வைபவ் தவற விட்டார்.
அபிஷேக் சர்மா சாதனையும் முறியடிப்பு
உலக அளவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் கிரிக்கெட்டில் வேகமான சதத்திற்கான சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் வைத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு டாஸ்மேனியாவுக்கு எதிரான போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக மெக்கர்க் 29 பந்துகளில் சதத்தை எட்டினார்.
இதனைத் தொடர்ந்து 31 பந்துகளில் சதத்தை எட்டிய ஏபி டிவில்லியர்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக சதம் அடித்த இரண்டாவது வீரர் ஆவார். அதே வேளையில் வைபவ் சூர்யவன்ஷி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 40 பந்துகளில் சதத்தை எட்டிய யூசுப் பதானையும், 42 பந்துகளில் சதத்தை எட்டிய அபிஷேக் சர்மாவையும் முறியடித்தார்.

