பந்தை சேதப்படுத்த வார்னர் காரணமாக இருந்ததற்கு நான் தான் காரணம் என அவரது மனைவி கேண்டீஸ் மனம் வருந்தி தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிருக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரம் பூதாகரமாகியது.

இதன் எதிரொலியாக கேப்டன் பதவியை ஸ்மித்தும் துணை கேப்டன் பதவியை வார்னரும் இழந்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்தி, நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாக ஸ்மித்தும் வார்னரும் கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது கணவர் பந்தை சேதப்படுத்தியதற்கு நான் தான் காரணம். எனக்காக தான் பந்தை சேதப்படுத்தினார் என வார்னரின் மனைவி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பேசிய வார்னரின் மனைவி கேண்டீஸ், பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் என் கணவர் சிக்கியதற்கும், அந்த தவறைச் செய்ததற்கும் நான்தான் காரணம். அந்த குற்றஉணர்ச்சி என்னை கொல்கிறது. முழுமைக்கும் நானே காரணம் என தெரிவித்தார்.

மேலும், நானும் குழந்தைகளும் கேப்டவுன் டெஸ்ட் போட்டியைப் பார்க்கச் சென்றிருந்தபோது, என்னுடைய முன்னாள் காதலரின் முகம் வரையப்பட்ட முகமூடியை மாட்டிக்கொண்டு ரசிகர்கள் என்னை கீழ்த்தரமாக கிண்டல் செய்தனர். என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர், என்னை பாட்டுப்பாடி கிண்டல் செய்தனர். ஆனால், அதை எல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தேன். ஆஸ்திரேலிய ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். எனது கணவரின் மீது இரக்கம் காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வார்னரின் மனைவி கூறியுள்ளதன்படி, தனது மனைவியை கிண்டல் செய்ததால், கோபத்தில் இருந்த வார்னர், தென்னாப்பிரிக்காவை எப்படியும் வீழ்த்திவிட வேண்டும் என்ற வேகத்தில் பந்தை சேதப்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

பின்னணி:

டேவிட் வார்னரின் மனைவி கேண்டிஸ். இவர் ஒரு பாப் பாடகி. இவரும் ரக்பி நட்சத்திரம் சோனி பில் வில்லியம்ஸும் காதலித்துவந்தனர். கடந்த 2007ம் ஆண்டுவரை நெருங்கி பழகிய அவர்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டதை அடுத்து வார்னரை கேண்டிஸ் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், டி காக்கிற்கும் வார்னருக்கும் இடையே டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த சண்டை கேமராவில் பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. வார்னரின் மனைவியை டி காக் அவதூறாக பேசியதால்தான் சண்டை நடந்ததாக கூறப்பட்டது.

அதன்பிறகு கேப்டவுன் டெஸ்ட் போட்டியின்போது, அந்த போட்டியை வார்னரின் மனைவி கேண்டிஸ் மற்றும் குழந்தைகள் கண்டுகொண்டிருந்தனர். அப்போது, வார்னரின் மனைவியை தென்னாப்பிரிக்க ரசிகர்கள் கேலி கிண்டல் செய்து அவதூறாக பேசினர். கேண்டிஸின் முன்னாள் காதலரின் முகமூடியை அணிந்துகொண்டு அவரை அவமானப்படுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த வார்னர், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பழிவாங்க வேண்டும் என நினைத்து பந்தை சேதப்படுத்தும் ஐடியா கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.