தன் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஒரு பவுலர் பந்துவீச்சை மட்டுமே எதிர்கொள்ள தான் பயந்திருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். துணிச்சலான கிரிக்கெட் வீரர்களை பட்டியலிட்டால் அதில் முதலாவதாக வீரேந்திர சேவாக் பெயரை குறிப்பிடலாம். போட்டியின் முதல் பாலை கூட எவ்வித தயக்கமும் இன்றி சிக்சருக்கு தூக்கி அடிப்பது இவரது வழக்கம். அதே போல் தான் 99 ரன்களில் இருந்தாலும் கூட சதம் அடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் பந்து வீச்சாளரை நிலைகுலைய வைக்க சிக்சருக்கு பறக்க விடுவதும் சேவாக் பழக்கம்.

 

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மைதானங்களில் அந்நாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை சேவாக் கதறவிட்ட வரலாறு உண்டு. ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் மட்டும் அல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்து இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சேவாக். டெஸ்ட் போட்டிகளை கூட டி20 கிரிக்கெட் போல ஆடக்கூடியவர். 

களத்தில் சேவாக் இருக்கும் போது ஆஸ்திரேலியாவின் மெக்ராத் கூட பந்து வீச தயங்கியது உண்டு என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சேவாக்கையே ஒரு பந்து வீச்சாளர் அச்சுறுத்தியுள்ளார். அவர் யாரென்று தற்போது சேவாக் கூறியுள்ளார். யுசி பிரவுசர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் உங்களை மிகவும் பயமுறுத்திய பந்து வீச்சாளர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு சற்றும் தயங்காமல் பாகிஸ்தானின் சோயப் அக்தர் என்று பதில் அளித்தார் சேவாக்.

 
 சோயப் அக்தர் பந்து தான் எப்போது நம் தலையில் படும், எப்போது நம் கால்களை பதம் பார்க்கும் என்று தெரியாது என சேவாக் கூறினார். இதனால் சோயப் அக்தர் பந்து வீச்சை எதிர்கொள்ள எப்போதுமே தனக்கு பயம் இருந்ததாகவும் சேவாக் தெரிவித்தார். அதே சமயம் சோயப் அக்தர் பந்து வீச்சை சிக்சருக்கு பறக்கவிடும் போது தனக்கு அலாதியான மகிழ்ச்சி கிடைக்கும் என்றும் சேவாக் மனம் விட்டு பேசியுள்ளார்.