ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஷான் மார்ஷின் சதத்தால் 298 ரன்களை குவித்தது. 

299 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, கோலியின் சதம் மற்றும் தோனியின் அரைசதம் ஆகியவற்றால் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஃபினிஷர் தோனியை மீண்டும் காணமுடிந்தது. கோலி தனது 39வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரரான கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். இந்த போட்டியிலும் சாதனையை செய்ய தவறவில்லை. இன்று அடித்த சதம் கோலியின் 63வது சர்வதேச சதம். இதன்மூலம் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை சங்கக்கராவுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த பட்டியலில் 100 சர்வதேச சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும் 71 சதங்களுடன் பாண்டிங் இரண்டாமிடத்திலும் 63 சதங்களுடன் மூன்றாமிடத்தை சங்கக்கராவுடன் கோலி பகிர்ந்துள்ளார். கோலி இந்த மைல்கல்லை வெறும் 359 போட்டிகளில் எட்டியுள்ளார்.