சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலியின் பெயர், பெரும்பாலான சாதனை பட்டியல்களில் உள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருவதால் விராட் கோலி ரன் மெஷின் என அழைக்கப்படுகிறார். சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார் கோலி. 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து இரண்டாவது இடம், சர்வதேச கிரிக்கெட்டில்(டெஸ்ட், ஒருநாள், டி20 அனைத்தையும் சேர்த்து) அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 58 சதங்களுடன் 5ம் இடத்தில் உள்ளார். 

முன்னாள் ஜாம்பவான்களின் சாதனைகளை, அவர்களை விட குறைந்த போட்டிகளிலேயே கோலி முறியடித்துள்ளார்; முறியடித்தும் வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான அரைசதங்களை சதமாக மாற்றியதில் டான் பிராட்மேனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 200 ரன்களை குவித்தார் கோலி. இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் 200 ரன்களை அதிகமுறை கடந்த வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.

விராட் கோலி, ஒரே டெஸ்ட் போட்டியில் 12 முறை 200 ரன்களை கடந்துள்ளார். இந்த பட்டியலில் 17 முறை 200 ரன்களை கடந்த சங்ககரா(இலங்கை) முதலிடத்திலும் 15 முறை 200 ரன்களை கடந்த பிரயன் லாரா(வெஸ்ட் இண்டீஸ்) இரண்டாமிடத்திலும் உள்ளனர். 14 மற்றும் 13 முறை 200 ரன்களை கடந்த பிராட்மேன் மற்றும் பாண்டிங் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ளனர்.

விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கு முன், இந்த பட்டியலில் கோலி முதலிடத்தை பிடித்துவிடுவார்.