டிரெண்ட் பிரிட்ஜில் நடந்த மூன்றாவது டெஸ்டில் சதமடித்த விராட் கோலியின் பெயர், அந்த மைதானத்தின் ஹானர்ஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. 

முதல் இன்னிங்ஸில் விராட் கோலி - ரஹானே ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 329 ரன்களை குவித்தது. இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் மிரட்டலான பவுலிங்கில் சரணடைந்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 352 ரன்களுக்கு டிக்ளேர் செய்து, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 521 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 521 ரன்களை விரட்டிய இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 97 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் விராட் கோலி. லார்ட்ஸ், டிரெண்ட் பிரிட்ஜ் போன்ற சில மைதானங்களில் சதமடிப்பவர்களின் பெயர்கள், ஹானர்ஸ் பலகையில் சேர்க்கப்படும். அந்த வகையில் டிரெண்ட் பிரிட்ஜில் சதமடித்த விராட் கோலியின் பெயர் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தனது பெயர் சேர்க்கப்பட்டதற்கு விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விராட் கோலியின் பெயர் சேர்க்கப்பட்ட புகைப்படம், பிசிசிஐ அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.