சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலியை 2018ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது ஐசிசி. ஐசிசியின் மூன்று விருதுகளை ஒருசேர வென்று சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. 

கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் கோலி, சர்வதேச போட்டிகளில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு மைல்கல்லை எட்டும் கோலி, கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளை படைத்து வருகிறார். 

2018ம் ஆண்டு விராட் கோலிக்கு மற்றுமொரு சிறந்த ஆண்டாக அமைந்தது. கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1322 ரன்களையும் 14 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1202 ரன்களையும் 10 டி20 போட்டிகளில் ஆடி 211 ரன்களையும் குவித்துள்ளார் கோலி. மொத்தமாக கடந்த ஆண்டில் மட்டும் சர்வதேச கிரிக்கெட்டில் 2735 ரன்களை குவித்துள்ளார். 

ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் கோலி. இந்நிலையில், கடந்த ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலியை தேர்வு செய்துள்ளது ஐசிசி. சர் கார்ஃபீல்டு சோபர்ஸ் டிராபியையும் கோலி வென்றுள்ளார். மேலும் 2018ம் ஆண்டின் மிகச்சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் வீரராகவும் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறந்த வீரரை ஐசிசி தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டின் மிகச்சிறந்த வீரராக கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக கோலி அறிவிக்கப்படுவது இதுதான் முதன்முறை. ஐசிசியின் மூன்று அவார்டுகளையும் ஒருசேர பெற்ற பெருமைக்குரியவர் ஆனார் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் ஆதிக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.