இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள 80 அணைகளும் திறக்கப்பட்டன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரள மாநிலம் முழுவதுமே மூழ்கியது. கேரளாவின் 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 8000 வீடுகள் இடிந்துள்ளன. 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.  8 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், துணை ராணுவப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மாநிலம் முழுவதும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவிற்கு மத்திய அரசு ரூ.600 கோடியை இடைக்கால நிவாரண நிதியாக அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் கேரளாவிற்கு நிதியுதவி அளித்துள்ளன. பிரபலங்களும் தனிநபர்களும் தங்களால் இயன்ற நிதியை கேரளாவிற்கு அளித்துவருகின்றனர்.

கனமழை வெள்ளத்தால் கேரள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த வெற்றியை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி, கேரளாவில் மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இது மிகவும் கடினமான நேரம். இந்திய அணியின் சார்பில் இந்த வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என கோலி தெரிவித்தார். இதையடுத்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பலத்த கரகோஷங்களை எழுப்பினர்.