இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். 2028 ஒலிம்பிக்கில் களம் காண உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 18 மாத இடைவெளிக்குப் பிறகு தனது ஒலிம்பிக் கனவைத் தொடர மீண்டும் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். தனது தொழில்முறை மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்ற முடிவை அவர் திரும்ப பெற்றுள்ளார். கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக போகத் அறிவித்து இருந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதியில் கியூபாவின் யுஸ்னெய்லிஸ் குஸ்மான் லோபஸை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கப் போட்டிக்கு போகத் முன்னேறினார். தங்கப் பதக்கத்திற்காக அமெரிக்காவின் சாரா ஆன் ஹில்டெபிராண்டிற்கு எதிராக அவர் போட்டியிட இருந்தார். ஆனால் எடை வரம்பை மீறியதால் கடைசி நேரத்தில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் தனது ஓய்வு முடிவை வினேஷ் போகத் திரும்ப பெற்றுள்ளார்.
ஓய்வு முடிவை திரும்ப பெற்ற வினேஷ் போகத்
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''"பாரிஸ் தான் இறுதியா என்று மக்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நீண்ட காலமாக, என்னிடம் பதில் இல்லை. நான் மல்யுத்த களத்தில் இருந்தும், அழுத்தத்தில் இருந்தும், எதிர்பார்ப்புகளில் இருந்தும், என் சொந்த லட்சியங்களில் இருந்தும் கூட விலகி இருக்க வேண்டியிருந்தது. பல ஆண்டுகளில் முதல்முறையாக, நான் சுவாசிக்க என்னை அனுமதித்தேன்.
இன்னும் போட்டியிட விரும்புகிறேன்
என் பயணத்தின் கனத்தை, அதன் உச்சங்களை, மனமுறிவுகளை, தியாகங்களை, உலகம் காணாத என் வடிவங்களைப் புரிந்துகொள்ள நேரம் எடுத்தேன். அந்தப் பிரதிபலிப்பில், நான் உண்மையைக் கண்டேன், நான் இன்னும் இந்த விளையாட்டை நேசிக்கிறேன். நான் இன்னும் போட்டியிட விரும்புகிறேன். அந்த அமைதியில், நான் மறந்த ஒன்றைக் கண்டேன்.
மீண்டும் அடியெடுத்து வைக்கிறேன்
'நெருப்பு ஒருபோதும் அணையவில்லை'. அது சோர்வு மற்றும் இரைச்சலுக்கு அடியில் புதைந்திருந்தது. ஒழுக்கம், வழக்கம், போராட்டம்... அது என் ரத்தத்தில் உள்ளது. நான் எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும், என் ஒரு பகுதி மல்யுத்த களத்திலேயே இருந்தது. எனவே, பயமற்ற இதயத்துடனும், பணிய மறுக்கும் மனத்துடனும் LA28-ஐ நோக்கி மீண்டும் அடியெடுத்து வைக்கிறேன்'' எண்று கூறியுள்ளார்.
பல்வேறு பதக்கங்களை அறுவடை செய்தவர்
சிறந்த வீரரான வினேஷ் போகத் இரண்டு உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கங்களையும் (2019 மற்றும் 2022), ஒரு ஆசிய விளையாட்டுத் தங்கப் பதக்கத்தையும் (2018) மற்றும் வெண்கலப் பதக்கத்தையும் (2014), மூன்று காமன்வெல்த் விளையாட்டுத் தங்கப் பதக்கங்களையும் (2014, 2018, 2022) வென்றுள்ளார். அவர் 2021 ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


