வினேஷ் போகத்துக்கு ரூ.4 கோடி! மூன்று ஆப்ஷன் கொடுத்த ஹரியானா அரசு!
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஹரியானா அரசு ரூ.4 கோடி ரொக்கப் பரிசை வழங்கியது. எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அரசாங்கப் பதவியைத் தேர்வு செய்ய முடியாததால் பணத்தை தேர்வு செய்தார்.

Vinesh Phogat
மல்யுத்த வீராங்கனையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான வினேஷ் போகத்துக்கு ஹரியானா அரசு அதன் விளையாட்டுக் கொள்கையின் கீழ் மூன்று வாய்ப்புகளை வழங்கியது. அதில் அவர் ரூ.4 கோடி ரொக்கப் பரிசை ஏற்றுக்கொள்ளத் முடிவு செய்துள்ளார். ஹரியானா அரசாங்கத்தின் விளையாட்டுக் கொள்கை ஒலிம்பிக் வீரர்கள் உட்பட சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுத் துறையில் துணை இயக்குநர் நிலை பதவியை வழங்குகிறது.
Vinesh Phogat
இந்த ஆண்டு மார்ச் 25 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஜூலானா எம்.எல்.ஏ.வான வினேஷ் போகட்டுக்கு, விளையாட்டுக் கொள்கையின் கீழ் மூன்று வெகுமதிகளில் ஒன்றைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ரூ.4 கோடி ரொக்கப் பரிசு, "குரூப் ஏ" வேலை அல்லது ஹரியானா வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு நிலம் ஆகிய ஒதுக்கீடு என மூன்று வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்பட்டன.
Vinesh Phogat
தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள வினேஷ் போகத் அரசாங்கப் பதவியைத் தேர்வு செய்ய முடியாது என்பதால், ரூ.4 கோடி பணத்தைத் தேர்வு செய்துள்ளார். இரண்டு வாரங்கள் கழித்து தனது முடிவை அரசுக்குத் தெரிவித்துள்ளார். போகத்தின் முடிவை மாநில விளையாட்டுத் துறைக்குத் தெரிவிக்கும் கடிதம் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டது என்று வினேஷ் போகத்தின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு நிலத்தை வாங்கவும் திட்டமிட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Vinesh Phogat
மார்ச் 25 அன்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து பேசிய ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, “வினேஷ் போகத் இப்போது எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவர் எந்தெந்த சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று அவரிடம் கேட்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.” என்றார். மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின்படி, வெள்ளிப் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்கள் இந்த மூன்று நன்மைகளுக்கும் தகுதியுடையவர்கள் எனவும் சைனி குறிப்பிட்டார்.
Vinesh Phogat
பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால் இறுதிப்போட்டிக்குச் சற்று முன்பாக 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வினேஷ் போகத் கூட்டாக வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரினார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.