விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி சுற்று நேற்று தொடங்கியது. இதில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் கர்நாடகா - ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 347 ஓட்டங்கள் குவித்தது.

மயங்க் அகர்வால் 140 ஓட்டங்களும் ரவிகுமார் சமர்த் 125 ஓட்டங்களும் அடித்தனர். கேப்டன் கருண் நாயர் 10 ஓட்டங்களில் வீழ்ந்தார்.

ஐதராபாத் அணி தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டும், ரவிகிரண் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 42.5 ஓவர்களில் 244 ஓட்டங்களில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதன் மூலம் கர்நாடகா அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கர்நாடகா தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பின்னி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.