இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தி விதர்பா அணி கோப்பை வென்றது. 

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த விதர்பா 226.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 800 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

அந்த அணியில் வாசிம் ஜாஃபர் 34 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 286 ஓட்டங்கள், கணேஷ் சதீஷ் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர் உள்பட 120 ஓட்டங்கள் விளாசினர். அபூர்வ் வான்கடே 16 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 157 ஓட்டங்கள், ரஜ்னீஷ் குர்பானி 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் சித்தார்த் கெüல் 2, அஸ்வின், நதீம், ஜெயந்த், விஹாரி, அகர்வால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் ஆடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா 129.1 ஓவர்களில் 390 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹனுமந்த் விஹாரி 23 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 183 ஓட்டங்கள் எடுத்தார். ஜெயந்த் யாதவ் 14 பவுண்டரிகள் உள்பட 96 ஓட்டங்கள் சேர்த்தார். 

விதர்பா தரப்பில் ரஜ்னீஷ் குர்பானி 4, ஆதித்யா சர்வதே 3, உமேஷ் யாதவ் 2, ஆதித்யா தாக்கரே ஒரு விக்கெட் சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 410 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற விதர்பா, கடைசி நாளான நேற்றைய முடிவின்போது 2-வது இன்னிங்ஸில் 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சஞ்சய் ராமசாமி 27 ஓட்டங்கள், அக்ஷய் வத்கர் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த ஆட்டம் டிரா ஆனபோதிலும், முதல் இன்னிங்ஸில் வென்றதன் அடிப்படையில் விதர்பா அணி சாம்பியன் ஆனது. 

மூன்று சதத்தை நெருங்கிய வாசிம் ஜாஃபர் ஆட்டநாயகன் ஆனார்.