Vellore student gold medal wins in sail boat race in Andhra
தேசிய, சர்வதேச அளவிலான பாய்மர படகுப் போட்டியில் வேலூர் மாணவர் விஷ்ணு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் கிருஷ்ணப்பட்டனம் துறைமுகத்தில் தேசிய அளவிலான பாய்மர படகுப் போட்டிகள் கடந்த டிசம்பர் 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 300 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், சீனியர் பிரிவு போட்டியில் வேலூரைச் சேர்ந்த விஷ்ணு (18) தங்கப்பதக்கம் வென்றார். மேலும், சீனியர் பிரிவில் மிகக்குறைந்த வயதில் தங்கப்பதக்கம் வென்றவர் என்ற புதிய சாதனையும் படைத்துள்ளார்.
பின்னர், சர்வதேச பாய்மர படகுப் போட்டிகள் அதே துறைமுகத்தில் கடந்த டிசம்பர் 27 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றன. 12 நாடுகளைச் சேர்ந்த 60 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டிகளில் 21 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவிலும் மாணவர் விஷ்ணு தங்கப்பதக்கம் வென்றார்.
வேலூர் அருகே சலமநத்தத்தைச் சேர்ந்த விஷ்ணு, தற்போது மும்பையிலுள்ள இராணுவப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தந்தை சரவணன், இந்திய இராணுவத்தில் பணியாற்றுகிறார். இவர் விஷ்ணுவின் பயிற்சியாளராகவும் உள்ளார்.
