கபில் தேவ், கங்குலி, தோனி ஆகியோர் கேப்டனாக இந்திய அணியை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்த்தெடுத்துள்ளனர். இவர்கள் மூவரின் கேப்டன்சியும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடியவை. 

2000ம் ஆண்டுக்கு பிறகு கேப்டனாக இருந்தவர்கள் கங்குலியும் தோனியும். இருவருமே அவர்கள் கேப்டனாக இருந்த சமயங்களில் பல இளம் வீரர்களை இனம்கண்டு வளர்த்துவிட்டுள்ளனர். சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ், தோனி ஆகிய வீரர்கள் கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் இடம்பெற்று வளர்ந்தவர்கள். அவர்களுக்கு சரியான வாய்ப்பை வழங்கி அவர்களது திறமையை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு கொடுத்தவர் கங்குலி.

கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணி, 2003 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்று இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

தோனியும் இளம் வீரர்களை இனம்கண்டு அவர்களின் திறமையை பயன்படுத்துவதில் கங்குலி மாதிரியே வல்லவர். கங்குலியின் கேப்டன்சியில் வெல்ல முடியாமல் போன உலக கோப்பையை 2011ம் ஆண்டு வென்று கொடுத்தார் தோனி. டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர் தோனி.

கங்குலியும் தோனியும் கேப்டனாக இந்திய அணிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர். இருவரின் கேப்டன்சியின் கீழும் ஆடியுள்ள அதிரடி வீரர் ராபின் உத்தப்பா, கங்குலி-தோனி இருவரில் யார் அவருக்கு பிடித்த கேப்டன் என்ற கேள்விக்கு தோனி என பதிலளித்துள்ளார்.

தோனியின் கேப்டன்சியில் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோது அந்த அணியில் உத்தப்பாவும் இடம் பெற்றிருந்தார். இந்திய அணிக்காக 46 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் உத்தப்பா.