இந்திய அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலியை அபாரமான கேட்ச்சின் மூலம் வெளியேற்றினார் உஸ்மான் கவாஜா.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

100 ரன்களுக்கு உள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி அதிர்ச்சியளித்தது. வழக்கம்போலவே ராகுல் வந்ததுமே 2 ரன்களில் நடையை கட்ட, முரளி விஜய்(11), கோலி(3), ரஹானே(13), ரோஹித் (37) என வரிசையாக வெளியேறினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிவரும் புஜாராவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடிவருகிறார். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் கோலி, 3 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அது ஒரு அற்புதமான கேட்ச். பாட் கம்மின்ஸ் வீசிய 11வது ஓவரின் மூன்றாவது பந்து, கோலியின் பேட்டில் எட்ஜாகி சென்றது. அந்த பந்தை அபாரமாக ஜம்ப் செய்து கேட்ச் பிடித்தார் கவாஜா. கவாஜா பிடித்த கேட்ச்சை பார்த்து அதிர்ச்சியான கோலி, ஒரு நல்ல கேட்ச்சின் மூலம் ரன் குவிக்க முடியாத ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.