இந்தியாவின் சமீர் வர்மா, ஹெ.எஸ்.பிரணாய் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி அமெரிக்காவில் இன்றுத் தொடங்குகிறது.

இதில் சமீர் வர்மா தனது முதல் சுற்றில் வியத்நாமின் ஹாங் நாம் குயெனையும்,  பி.காஷ்யப் தனது முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியாவின் லீ ஹியுன் இல்-யையும், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஹெச்.எஸ்.பிரணாய், ஆஸ்திரியாவின் லுகா ரேபரையும் எதிர்கொள்கின்றனர்.

மற்ற ஆடவர் பிரிவு முதல் சுற்றுகளில் இந்தியாவின் அபிஷேக் எலேகர், போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் பிரைஸ் லெவெர்டெஸை சந்திக்கிறார். லக்கானி சாரங், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை எதிர்கொள்கிறார். ஹர்ஷீல் தானி, மெக்ஸிகோவின் ஆர்டுரோ ஹெர்னான்டஸுடன் மோதுகிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில், தேசிய சாம்பியனான ரிதுபர்னா தாஸ் தனது முதல் சுற்றில் கனடாவின் ரேச்சல் ஹான்டெரிச்சை சந்திக்கிறார்.

போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அயா ஒஹோரியை இந்தியாவின் ஷிவானி முதல் சுற்றில் எதிர்கொள்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணப் பிரியா குதரவள்ளி, அமெரிக்காவின் மாயா சென்னையும், சாய் உத்தெஜிதா ராவ், நெதர்லாந்தின் கேல் மாஹுலேட்டையும், ரேஷ்மா கார்த்திக், டென்மார்கின் சோஃபி ஹோல்ம்போவையும் தங்களது முதல் சுற்றில் சந்திக்கின்றனர்.

இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில், போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் மானு அத்ரி - சுமித் ரெட்டி இணை, கனடாவின் ஜேசன் அந்தோணி - நைல் யாகுரா இணையை எதிர்கொள்கிறது.

அவர்கள் தவிர, பிரான்சிஸ் ஆல்வின் - கோனா தருண், ஸ்வஸ்திக் சாய்ராஜ் - சிரக் ஷெட்டி இணையும் களம் காணுகின்றன.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை, இங்கிலாதின் பென் லேன் - ஜெஸ்ஸிகா புக் இணையை சந்திக்கிறது. இப்பிரிவில், கோனா தருண் - மேக்னா ஜகம்புடி, மானு அத்ரி - மனீஷா ஆகிய இணைகளும் களம் காண்கிறது.