- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!
IND vs SA 4th T20I Called Off: போட்டியை நடத்த ஏதும் வாய்ப்புள்ளதா என்பது குறித்து கள நடுவர்கள் சுமார் 5 முறை ஆய்வு நடத்தினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

IND vs SA 4வது T20 போட்டி
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான 4வது டி20 போட்டி இன்று (டிசம்பர் 17) உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது.
வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இது லக்னோவையும் விட்டு வைக்கவில்லை. போட்டி 7 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், மாலை 5 மணிக்கு மேலேயே லக்னோ முழுவதும் கடும் பனிமூட்டம் நிலவியது.
பனிமூட்டம் காரணமாக போட்டி ரத்து
அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானமே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டியை பார்க்க வந்த மைதானத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், அவர்களும், வீரர்களும் தெரியாத அளவுக்கு கடுமையாக பனிமூட்டம் இருந்தது.
போட்டியை நடத்த ஏதும் வாய்ப்புள்ளதா என்பது குறித்து கள நடுவர்கள் சுமார் 5 முறை ஆய்வு நடத்தினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. பனிமூட்டம் மேலும் அதிகமானது. இதனால் வேறு வழியின்றி IND vs SAஇடையேயான 4வது T20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்திருந்து ரசிகர்கள் ஏமாற்றம்
அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் போட்டியை கண்டுகளிக்க ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் திரண்டிருந்தனர். கள நடுவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ஆய்வு நடத்திக் கொண்டே இருந்ததால் எப்படியும் குறைந்த ஓவர்களை கொண்டு போட்டி தொடங்கி விடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் பனிமூட்டம் சுத்தமாக குறையவில்லை என்பதால் கடைசியில் போட்டி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்திய அணி முன்னிலை
4வது டி20 போட்டி ரத்து செய்யட்ட நிலையில், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை வென்று விடும். தோல்வி அடைந்தால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் ஆகி விடும். இனி இந்த டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணியால் வெல்ல முடியாது. கடைசி போட்டியில் வென்றால் தொடரை சமன் செய்ய முடியும்.

