19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன.

வங்கதேசத்தில் நடந்துவரும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி இந்த தொடர் தொடங்கியது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, ஹாங்காங், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 அணிகளும் கலந்துகொண்டன.

இதில் ஏ பிரிவில் இந்தியா, ஆஃப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் பி பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. 

லீக் சுற்றில் ஆஃப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணியை தவிர வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. 

முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் வங்கதேசத்தை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தானை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி நாளை நடக்கிறது. 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்த தொடரில் ஆடும் அணியுடன் வங்கதேசத்திற்கு செல்லவில்லை. ராகுல் டிராவிட் வீரர்களுடன் இல்லாவிட்டாலும், அவர் கற்றுக்கொடுத்த வித்தைகளை களத்தில் அவிழ்த்துவிட்டு இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இறுதி போட்டியிலும் இந்திய அணி வென்று ஆசிய கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.