ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் வீசிய பந்து ஒன்றை செல்லாது என அம்பயர் அறிவித்தார். இதனால் புவனேஷ்வர் குமார், கேப்டன் கோலி ஆகியோர் அதிருப்தியடைந்தனர். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 231 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டி வருகிறது. 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின் போது, 9வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், பேட்ஸ்மேனை அதிர்ச்சியடைய செய்யும் வகையில், கிரீஸிடம் வராமல், அம்பயருக்கு அருகில் ஓடிவரும்போதே பந்தை வீசிவிட்டார். இதைக்கண்ட பேட்ஸ்மேன் ஃபின்ச், அந்த பந்தை ஆடாமல் விலகிவிட்டார். அந்த பந்தை செல்லாது என கள நடுவர் காஃப் அறிவித்துவிட்டார். 

இதுபோன்ற விஷயங்களில் களத்தில் இருக்கும் மற்றொரு நடுவரிடம் ஆலோசிக்க வேண்டும். ஆனால் மற்றொரு நடுவரிடம் ஆலோசிக்காமல் உடனடியாக அந்த பந்தை செல்லாது என அம்பயர் காஃப் அறிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த புவனேஷ்வர் குமார், அது சரியான பந்துதான் என வாதிட்டார். ஆனால் அந்த பந்து செல்லாது என அறிவிக்கப்பட்டதால், ரீ பால் வீசிய புவனேஷ்வர் குமார் அடுத்த பந்திலேயே ஃபின்ச்சை வீழ்த்தினார்.