வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோசமாக பந்துவீசியதன் மூலம் எதிர்மறையான சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்.

இந்திய அணியின் நிரந்தர வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் திகழ்கின்றனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து போட்டிகளில் ஆடிவருவதால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

இரண்டு போட்டிகளிலுமே வெஸ்ட் இண்டீஸ் அணி நல்ல ஸ்கோரை அடித்தது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 322 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகியோரின் பவுலிங்கை பாரபட்சம் பார்க்காமல் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளுத்து வாங்கியது. இந்த போட்டியில் ஷமி 81 ரன்களையும் உமேஷ் யாதவ் 64 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். எனினும் இந்த போட்டியில் ரோஹித் மற்றும் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா நிர்ணயித்த 322 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். ஷமி மற்றும் உமேஷ் யாதவின் பந்துவீச்சை அடித்து ஆடினர். கடைசி நேரத்தில் ஷமி கட்டுக்கோப்பாக வீசினார். ஆனால் கடைசி நேரத்தில் உமேஷ் வீசிய ஓவர்களிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 10 ஓவர்கள் வீசிய உமேஷ் யாதவ் 78 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிகமுறை 70 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த பவுலர்களில் இலங்கை அணியின் லசித் மலிங்காவிற்கு அடுத்த இடத்தை உமேஷ் யாதவ் பிடித்துள்ளார். 

17 முறை 70 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த மலிங்காவிற்கு அடுத்து 12 முறை 70 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த உமேஷ் யாதவ் இரண்டாமிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 11 முறை இந்த சம்பவத்தை செய்த இங்கிலாந்தின் அடில் ரஷீத் மூன்றாமிடத்தில் உள்ளார்.