உமேஷ் யாதவின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் விக்கெட்டை இழந்து திணறிவருகிறது. 

ஹைதராபாத்தில் நடந்துவரும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷர்துல் தாகூர் 10 பந்துகள் மட்டுமே வீசிவிட்டு காயத்தால் வெளியேறிய நிலையில், முதல் இன்னிங்ஸில் தனி ஒரு வேகப்பந்து வீச்சாளராக முழு பொறுப்பையும் கையில் எடுத்து அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ், 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

56 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களான பிராத்வைட் மற்றும் பவல் இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். ஹெட்மயர் 17, ஹோப் 28 ரன்களில் வெளியேறினர். முதல் இன்னிங்ஸில் சதமடித்த சேஸை இந்தமுறை 6 ரன்களில் கிளீன் போல்டாக்கி அனுப்பினார் உமேஷ். அதற்கடுத்து டவ்ரிச்சையும் கிளீன் போல்டாக்கி ரன்னே எடுக்காமல் பெவிலியனுக்கு அனுப்பினார் உமேஷ் யாதவ். 

தாகூரும் இல்லாத நிலையில், தனி ஒரு வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் வெஸ்ட் இண்டீஸை மிரட்டிவருகிறார். கடந்த இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ், இந்த இன்னிங்ஸில் இதுவரை 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. இன்னும் 4 விக்கெட்டுகள் எஞ்சியுள்ள நிலையில், உமேஷ் யாதவ் கூடுதலாக விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது.